ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் என்பன உள்ளிட்ட பல்வே று கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் (சிஐடியு) சார்பில் மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடந்தது. படம்: எஸ்.சத்தியசீலன் 
தமிழகம்

சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் ஊதிய உயர்வு கோரி உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

சென்னை: ஊதிய உயர்வு கோரி சென்னைமாநகராட்சி செங்கொடி சங்கத்தினர் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் ரிப்பன் மாளிகை முற்றுகை போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

இப்போராட்டம் தொடர்பாகசெங்கொடி சங்க பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு கூறியதாவது: ஊதியக்குழு பரிந்துரைப்படிஅனைத்து நிலை பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தி கடந்த ஜூன் 16-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கவில்லை. அந்த உத்தரவுப்படி உயர்த்தப்பட்ட மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.

மாநகராட்சி பணிகளில் தனியார் மயத்தைக் கைவிட வேண்டும். மாநகராட்சியே நேரடியாக வேலை வழங்க வேண்டும். 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணிபுரிந்த மலேரியா, சாலை, பூங்கா, அம்மா உணவகம் ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம்செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 9 மணிமுதல்மாலை 5.30 மணிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT