சென்னை: நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்குஉண்டு என்று நவிமும்பை தமிழ்ச் சங்க கட்டிட திறப்பு விழாவில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பெருமிதத்துடன் கூறினார்.
வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகளுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பையின் வாஷி பகுதியில் செயல்படும் நவிமும்பை தமிழ்ச் சங்க கட்டிட சீரமைப்புக்காக ரூ.1.25 கோடி வழங்கப்பட்டது. இக்கட்டிடத்தை தமிழக தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: உலகின் மூத்த குடியான நம் தமிழ்க் குடியினர் உலகமெங்கும் பரவி வாழ்கின்றனர். தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் எல்லாம் தமது பிள்ளைகள் தமிழ் பயில ஊக்குவித்து வருகின்றனர். எதற்காக தமிழ் கற்கிறோம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவும், தமிழ் கற்பதால் அடையக்கூடிய நன்மைகள் குறித்தும் ஆசிரியர்கள் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும்.
நவீன அறிவியல் உலகில் ஒருமொழி நிலைத்து நிற்க வேண்டுமானால், அதன் வேர்களில் ஒன்றாகஅறிவியல் விளங்குவது அவசியம். நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்குஉண்டு. புலம்பெயர் நாடுகளில் வாழும் 2-ம் தலைமுறை தமிழ்பிள்ளைகளால் இதற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்க முடியும். அதற்கு, மூத்த தலைமுறையினர் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில மின் உற்பத்தி நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பொன்.அன்பழகன், மகாராஷ்டிர திறன் வளர்ச்சி நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் நல்.ராமசாமி, தமிழக செய்தித் துறை செயலர் இரா.செல்வராசு, துறை இயக்குநர் அவ்வை அருள், நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழு தலைவர் வ.ரெ.போ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.