தமிழகம்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்: வருவாய் நிர்வாக ஆணையரகம் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கமாநில பொதுச்செயலாளர் அருள்ராஜ், முதல்வர் தனிப்பிரிவில் அளித்த மனுவில், “கிராம நிர்வாக அலுவலர்கள் பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றும் நிலையில், அவர்களுக்கு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும். மருத்துவர்கள், அரசுமருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணிப்பாதுகாப்புச் சட்டம் போன்று, கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்நிலையில், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர் சங்கபொதுச்செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், கிராம நிர்வாக அலுவலர்களின் பணிப்பாதுகாப்புச் சட்டம் தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்கும் நிலையில், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டத்தின்நகலை அனுப்ப கோரியுள்ளது.

இதுகுறித்து மனுதாரரான அருள்ராஜ் கூறும்போது, ‘‘எங்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு திமுகஆட்சியில் முதல்வராக கருணாநிதி இருந்தபோதுதான், மருத்துவர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டம் குறித்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

தற்போது மீண்டும் சட்ட நகலை கோரியுள்ளனர். அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலித்து வருவதால், விரைவில் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT