கூடலூர்: கூடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மலை மாவட்டமான நீலகிரியில், மக்கள் உயர்தர மருத்துவ வசதிகளுக்கு கோவை அல்லது கர்நாடகாவின் மைசூரு, கேரளாவின் பத்தேரி உள்ளிட்ட நகரங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், போக்குவரத்து செலவுகள் மட்டுமின்றி அலைச்சலும் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து, இங்கு வசிக்கக்கூடிய பொதுமக்கள் உயர்தர மருத்துவ சிசிச்சை பெறும் வகையில், உதகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்தி வந்ததுடன், ஹெச்.பி.எஃப் தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில், அந்த கட்டிடத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் யோசனை தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. உதகை ஹெச்.பி.எஃப். கோல்ப் மைதானம் அருகே தமிழக வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலமும், அருகில் கால்நடை துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கின. மருத்துவக்கல்லூரி செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், மருத்துவமனை கட்டுமானப் பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
உதகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப் பட்டுள்ளதால், கூடலூரிலுள்ள மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.
இந்த மருத்துவமனைக்கு தற்போது 2000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் வந்து செல்கின்றனர். 500-க்கும் மேற்பட்டோர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு தொடர் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழக் கூடிய கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசு மருத்துவ மனையை நோக்கி வருகின்றனர்.
ஆனால், தொகுதியில் முதன்மை மருத்துவமனையாக இருக்கக்கூடிய கூடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், தற்போது போதுமான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக ஓவேலி பேரூராட்சி துணைத் தலைவர் சகாதேவன் கூறியதாவது: கூடலூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், தோல் நோய் மருத்துவர், பல் மருத்துவர், கண் மருத்துவர், இதய சிகிச்சை நிபுணர், நரம்பியல் மருத்துவர், சிடி ஸ்கேன் ஆய்வு மருத்துவர் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு மருத்துவர்கள் இல்லை. மகப்பேறு மருத்துவ உதவியாளர், ஆண் செவிலியர் உதவியாளர், பெண் செவிலியர் உதவியாளர், இசிஜி டெக்னீஷியன் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களும் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மருந்தாளுநர்கள் 2 பேரும், 10 பேர் இருக்க வேண்டிய லேப் டெக்னீஷியன் பிரிவில் 4 பேர் மட்டுமே உள்ளனர். டயாலிசிஸ் யூனிட், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் இஎன்டி சிகிச்சைக்கான உபகரணங்கள் ஏதுமில்லை. இதனால் இஎன்டி சிகிச்சை பெற வரும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. மேலும், நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 4 பேர் மட்டுமே உள்ளனர். மருத்துவமனையில் இருந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், கூடுதல் பொறுப்பாக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, கூடலூர் பகுதியில் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், பலர் தனியார் மருத்துவ மனைகளுக்கும், வெளி மாநில மருத்துவமனைகளுக்கும் செல்கின்றனர். கூடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாததால், பிரசவத்துக்கு செல்லக்கூடிய பெண்கள் அறுவை சிகிச்சை மற்றும் மற்ற அவசர சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
கூடலூரின் சீதோஷ்ண நிலைக்கும், உதகையின் சீதோஷ்ண நிலைக்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதால், பிரசவத்துக்கு செல்லக்கூடிய பெண்கள் மிகுந்த துன்பத்தை சந்திக்கின்றனர். கூடலூருக்கும் - உதகைக்கும் இடையே அதிக தொலைவு இருப்பதால், பயணம் மேற்கொள்ள 3 மணி நேரத்துக்கும் மேலாகிறது.
இதனால் அனைவருமே மிகுந்த துன்பத்தை சந்திக்க நேரிடுகிறது. அதிகமான விவசாயிகளையும், தினக் கூலித் தொழிலாளர்களையும், தோட்ட தொழிலாளர்களையும் கொண்டிருக்கக் கூடிய கூடலூர் சட்டப்பேரவை தொகுதியில், பல ஆண்டு கால போராட்டத்துக்கு பின்பு, கூடலூர் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இருப்பினும், போதிய மருத்துவர்களும், உபகரணங்களும், பணியாளர்களும் இல்லாததால், பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கூடலூர் அரசு மருத்துவமனையின் மீது தனி கவனம் செலுத்தி போதிய மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் நியமித்து, மருத்துவமனைக்கான உபகரணங்களையும் வழங்க தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் வலியுறுத்தியுள்ளார்.
பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கூடலூர் மருத்துவமனையில் தற்போது சில மருத்துவர்கள் பணியில் உள்ளனர். மருத்துவ உபகரணங்கள் வரப் பெற்றுள்ளன. மருத்துவர்களை பணியமர்த்த கவுன்சிலிங் நடக்கிறது. விரைவில் மருத்துவர்கள் நியமிக்கப் படுவார்கள்’ என்றனர்.