சென்னை: ஸ்விக்கி, ஸொமாட்டோ, ஓலா உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு நலவாரியம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனங்களின் பணியாளர்கள், முதல்வரை நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சுதந்திர தினத்தன்று, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து முதல்வர்மு.க.ஸ்டாலின் பேசும்போது, “சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஸொமாட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம்.நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப்பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனி நலவாரியம் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
அந்த வகையில், இணையவழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும்உணவு விநியோகம் மற்றும் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களான ‘கிக்’ தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில் தனியே நலவாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததற்காக, ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஸொமாட்டோ, டன்ஸோ, ஸெப்டோ போன்ற இணையவழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித் தனர்.
இச்சந்திப்பின்போது, அமைச்சர்சி.வி.கணேசன், தலைமைச்செய லர் சிவ்தாஸ் மீனா, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
முதல்வரை சந்தித்தபின் ஸொமாட்டோ பணியாளர் கார்த்திக்கூறும்போது, “இந்தியாவில் இதுவரை எங்களுக்கான எந்த நலவாரியமும் இல்லை. தமிழகத்தில்தான் முதல்வர் இந்த நலவாரியத்தை அமைத்துள்ளார். அதற்காக நன்றிதெரிவித்துள்ளோம். இதன்மூலம் உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ள 1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
கொத்தடிமைபோல் அச்சத்துடன் பணியாற்றிவரும் எங்களால், நாங்கள் பணியாற்றும் நிறுவனத்தை ‘செயலி’ மூலமே தொடர்புகொள்ள முடியும். விபத்து ஏற்பட்டால், அதற்கான உதவியையும்அந்த செயலி மூலம்தான் பெறமுடியும். தற்போது நலவாரியம் உள்ளதால் அதன்மூலம் உதவி்த் தொகை பெற்றுக் கொள்ள முடி யும்” என்றார்.
பெண் பணியாளர் லில்லி கூறும்போது, “எங்களுக்கு பணி பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். காப்பீடு வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டும்” என்றார்.
அரசு சார்பில் புதிய செயலி: ஓலா, ஊபர் ஓட்டுநர் கூட்டமைப்புதலைவர் ஜாகிர் உசேன் கூறும்போது, “கார், ஆட்டோ, சரக்கு வாகன ஓட்டுநர்களான எங்களுக்கு நலவாரியம் அமைத்துள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளோம். தற்போது தமிழகத்தில் ஆட்டோ, கால்டாக்சி, சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை இணைத்து அரசின் சார்பில்புதிய செயலி உருவாக்க முடிவெடுத்திருப்பதாக முதல்வர் எங்களிடம் தெரிவித்துள்ளார்” என்றார்.
இதற்கிடையே, உணவு விநியோக தொழிலாளர்கள் சிரமத்தை மையப்படுத்தி வெளியான ‘அநீதி’ திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் வசந்தபாலனும், முதல் வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.