எம்எல்ஏ சதாசிவம் 
தமிழகம்

பாமக எம்எல்ஏ உட்பட 4 பேர் மீது வரதட்சணை புகார் - மருமகள் அளித்த புகாரின்பேரில் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகரைச் சேர்ந்தவர் சதாசிவம். மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ. இவரது மகன் சங்கர். இவருக்கும் சர்க்கார் கொல்லப்பட்டி வீரக்காரன் கோயில் பகுதியைச் சேர்ந்த மனோலியா(24) என்பவருக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

தம்பதி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு மனோலியா பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், மாமனார், கணவர் உள்ளிட்டோர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீஸ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மனோலியா புகார் அனுப்பினார். இது குறித்து விசாரிக்குமாறு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி, சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மனோலியா கொடுத்த புகாரின் அடிப்படையில், கணவர் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, கணவரின் சகோதரி கலைவாணி ஆகியோர் மீது வரதட்சணை கேட்டு கொடுமை செய்தது, ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது, பெண் வன்கொடுமை செய்தது உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாமக எம்எல்ஏ சதாசிவம் கூறும்போது, குடும்ப பிரச்சினையில் பக்குவம் இல்லாமல் எனது மருமகள் போலீஸை நாடி உள்ளார். வழக்கறிஞரின் பேச்சைக் கேட்டு என் மீதும், குடும்ப உறுப்பினர்கள் மீது பொய் புகார் அளித்துள்ளார். நான் விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் வருகிறேன் என போலீஸிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.

SCROLL FOR NEXT