திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முதற்கட்ட யாத்திரை நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் பேசினார். அருகில் அண்ணாமலை, புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், மக்கள் கல்விக்கழகத் தலைவர் தேவநாதன் யாதவ், நயினார் நாகேந்திரன் எம்.எல். ஏ. உள்ளிட்டோர். படம்: மு.லெட்சுமி அருண் 
தமிழகம்

தமிழகத்தில் பிரிவினைவாதத்தை தூண்டும் திமுக அரசு - மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: “தமிழகத்தில் பிரிவினைவாதத்தை திமுக அரசு தூண்டி விடுகிறது” என்று, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் குற்றஞ்சாட்டினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் 'என் மண், என் மக்கள்' யாத்திரையின் முதற்கட்ட பயண நிறைவு விழா திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பேசியதாவது:

தமிழகத்தில் சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் பிரிக்கும் வகையில் தவறான தகவல்களை தந்து, திமுக அரசு மக்களிடம் பிரிவினைவாதத்தை தூண்டி விடுகிறது.

தமிழகத்தில் பாஜக ஆட்சியில் இல்லாதபோதும், மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக அமல்படுத்தாதபோதும், தமிழகத்துக்கான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தந்துகொண்டே இருக்கிறார்.

ஊழலும், குடும்ப நலனும், மக்களை வஞ்சிப்பதுமே கொள்கையாகக் கொண்ட திமுகவை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்.

உதயநிதியை முதல்வராக்குவதுதான் திமுகவின் நோக்கமாக இருக்கிறது. இங்குள்ள அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டபோது கோடி கோடியான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் நடைபெறும் ஊழல் ஆட்சியை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது.

அதிமுக, பாஜக கூட்டணி பழமையான கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும். தமிழகம் உயர்ந்தால்தான் இந்தியா உயரும் என பிரதமர் சொல்கிறார். அவர் எந்த நாட்டுக்கு சென்றாலும், ‘உலகின் பழமையான மொழி தமிழ்’ என்று பெருந்தன்மையோடு சொல்லி வருகிறார். தமிழகத்தில் குடும்ப ஆட்சி, ஊழல், அடக்குமுறை அனைத்தையும் மீறி நாம் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் விரைவில் பாஜகவின் கொடி பட்டொளி வீசி பறக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, பிரதமர் மோடி மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் என்பதை இந்த பயணத்தில் உணர்ந்துள்ளேன். அதுதான் இந்த முதல்கட்ட பயணத்தின் வெற்றி என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர்பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இந்திய மக்கள் கல்விக்கழகத் தலைவர் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT