தமிழகம்

நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் டாஸ்மாக்கில் மது விற்பனை நேரம் குறைப்பு: முத்துசாமி தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு: நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் கூறியதாவது: அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பொது மேலாளர் மூலமாக அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள விலைப்பட்டியல்களை புகைப்படம் எடுத்து அதை பட்டியலாகத் தயாரித்து நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணிகளை விரைவுபடுத்த நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பயனுடையதாக இருக்கும்.

டாஸ்மாக்கில் மதுவிற்பனை நேரத்தை குறைப்பது குறித்தும் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. நீதிமன்றத்தின் முழு உத்தரவு கிடைக்கப்பெற்றதும் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான பார் தொடர்பான வழக்கிலும், நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டு வசதித் துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதில் பொதுமக்களிடம் இருந்து 6 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றன. துறை அதிகாரிகள் மூலம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வீட்டுவசதி வாரியத்தில் வீடு, மனை வாங்கிய 15 ஆயிரம் பேருக்கு விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஈரோட்டில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு சின்னம் சிறந்த திட்டமாக ஏற்படுத்தப்படும். இவை, அவரின் நினைவை மட்டும் போற்றுவதாக மட்டுமல்லாமல், மக்களுக்கு 100 சதவீதம் பயன்படுவதாக இருக்கவேண்டும் என்பது தான் முதல்வரின் நோக்கமாக உள்ளது. அதற்கேற்ப நினைவுச்சின்னம் முடிவு செய்யப்படும், என்றார்.

SCROLL FOR NEXT