கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே வீட்டில் கணவர் பிரசவம் பார்த்ததில், பெண் உயிரிழந்தது தொடர்பாக சுகாதாரத் துறையினர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேடியப்பன்-தனலட்சுமி தம்பதி. இவர்களது மகள் லோகநாயகி (27). இவருக்கும் தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கர்ப்பமான லோகநாயகியை பிரசவத்துக்கு புளியம்பட்டிக்கு மாதேஷ் அழைத்து வந்துள்ளார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்த மாதேஷ், அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதில் லோகநாயகிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சிறிது நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட லோகநாயகியைச் சிகிச்சைக்காக, போச்சம்பள்ளி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த சுகாதாரத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக பர்கூர் வட்டாரம் பெருகோபனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராதிகா, போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில், லோகநாயகிக்கு அவரது கணவர் பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தை பிறந்த நிலையில் நச்சுக்கொடி உள்வாங்கி, லோகநாயகிக்கு ரத்த போக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து, காலை 10.30 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, உயிரிழப்புக்கான காரணம் அறிய பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “இயற்கை மீது ஆர்வம் கொண்ட மாதேஷ், மனைவிக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப்பிரசவம் பார்க்க வேண்டும் என நினைத்து இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.