சென்னை: டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2023’ விருதுகள் வழங்கும் விழா ஆக.25 (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வை இந்திய மருத்துவ சங்கம் (தமிழ்நாடு), ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், யுனைடெட் எஜுகேஷனல் அண்ட் சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. ரஷ்ய கலாச்சார மையம் ஒருங்கிணைப்பு பார்ட்னராக இணைந்துள்ளது.
மருத்துவப் பணியை சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் ஆற்றிவரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான இவ்விருதுகள் வழங்கும் விழா சென்னை, கோவை, மதுரை என 3 மண்டலங்களில் நடைபெறவுள்ளது.
சென்னையில் ஆக.25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஆழ்வார்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கப்படவுள்ளன. தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்கவுள்ளார்.
இவ்விழாவில், ரெக்கிட் (SOA) நிறுவன வெளிவிவகாரங்கள் மற்றும் கூட்டாண்மைக்கான இயக்குநர் ரவி பட்னாகர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், தமிழ்நாடு ஐஎம்ஏ தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி, ஐஎம்ஏ மதிப்புறு மாநில செயலாளர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவ்விரு விழாக்களிலும் அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.