சென்னை: ஜி-20 மன்றத்தின் மூலம் பருவநிலை மாற்றம், வறுமை போன்ற உலகின் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சார்பிலான சுற்றுலா குறித்த ஜி-20 உச்சி மாநாடு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதன் நிறைவு விழா சென்னை தரமணியில் உள்ள அதன் வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராகப் பங்கேற்று, பல்கலைக்கழக வளாகத்தை பார்வையிட்டார்.
விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது: தற்போதைய காலத்தில் டிஜிட்டல் இந்தியா மிகவும் அவசியமானதாகும். அதைக் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாகும். அதனால் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. உலக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களில் 45% பேர் இந்தியாவில் உள்ளனர். டிஜிட்டல் இந்தியாவால் மட்டுமே இது சாத்தியமானது. இதன்மூலம் உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது.
இதுதவிர டிஜிட்டல் இந்தியா மூலம் மக்கள் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனர். உதாரணத்துக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் முறைகேடுகள் இல்லாமல் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. அதேபோல், விரைவில் பொருளாதாரத்தில் உலகளவில் இந்தியா முதல் 3 இடங்களில் இடம்பெறும். தற்போது கல்வி, வேலைவாய்ப்பில் அதிகளவில் பெண்கள் இடம் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த ஜி-20 மன்றத்தின் மூலம் பருவநிலை மாற்றம், வறுமை போன்ற உலகின் பல முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் ஜி-20 உறுப்பு நாடுகளின் தூதரக அதிகாரிகள், சட்டப் பல்கலை. துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.