தமிழகம்

மாணவர் காங்கிரஸை வலுப்படுத்த பொறுப்பாளர்கள் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: கல்லூரிகளில் மாணவர் காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்த சென்னை உட்பட 11 மண்டலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவர்களுக்கு உறுதுணையாக இருந்து, முழு ஒத்துழைப்புவழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் மா.சின்னதம்பி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவர் காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்துமாறு அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் நீரஜ் குந்தன் அறிவுறுத்தியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, அகில இந்திய மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர் கண்ணையா குமார், மாநில பொறுப்பாளர் நாகேஷ் கரியப்பா ஆகியோரது பரிந்துரைப்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 11 மண்டலங்களுக்கு 11 பொறுப்பாளர்கள், 11 கூடுதல்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, சென்னை மண்டலத்துக்கு தமிழக மாணவர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் இனியன் ராபர்ட் பொறுப்பாளராகவும், மாநில செயலாளர் ஸ்ட்ராஜியன் கூடுதல் பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மண்டலத்துக்கு மாநில பொதுச் செயலாளர்கள் ரிச்சர்ட் பொறுப்பாளராகவும், முகேஷ் கூடுதல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முழு ஒத்துழைப்பு: இவர்கள், தாங்கள் பொறுப்பேற்கும் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களை சந்தித்து மாணவர் காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார்கள். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவர்களுக்கு உறுதுணையாக இருந்து, முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

SCROLL FOR NEXT