தமிழகம்

கருணாநிதியின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதிஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இரா.செல்வராஜ், நூற்றாண்டு விழா சிறப்புப் பணி அலுவலர் என்.சுப்பையன், செய்தி மக்கள் தொடர்புத் துறைஇயக்குநர் த.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்தவரும், 13 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழகத்தின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல் இந்திய அரசியலின் திசையைதீர்மானிப்பவராகவும் திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

நூற்றாண்டு நாயகரான அவரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும், சமுதாயத்தில் அதன் தாக்கத்தையும் வருங்காலங்களில் தமிழக மக்கள் என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் அவரது நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பியான அவரை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்லாமல், அவர் தமிழக மக்களின் நலனுக்காக அறிவித்து நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும், இந்த விழாக்கள் அமைய வேண்டும்.

அவரது நூற்றாண்டு விழாவை அரசு நடத்துவது மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசுஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாகவும் அமைய வேண்டும். நூற்றாண்டு விழாவை தமிழக அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பாக அமைச்சர்கள் தலைமையில் 12 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

கருணாநிதியின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்துக்கு ஒரு நினைவுச் சின்னம்அமைக்க வேண்டும். கோவையில் கலைஞர் செம்மொழி பூங்காவுக்கும், சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்துக்கும் விரைவில் அடிக்கல் நாட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்துக்கு அவர் ஆற்றிய பங்கின் மூலமாக நாட்டுக்கு அவர்எப்படி புகழ் சேர்த்தார் என்பதுகுறித்து, அனைவரும் பயன்படுத்திடும் வகையில் அவரைப் பற்றிய 100 பக்க வரலாறு நூலை வெளியிட்டு, இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறையிடம் அவரது ஆளுமையை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாக அமைய வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT