மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.14 அடியாக உள்ள நிலையில், அணையின் மதகு அருகே குட்டைபோல தேங்கியுள்ள காவிரி நீர். 
தமிழகம்

மேட்டூர் அணைக்கு 13,638 கனஅடி நீர்வரத்து: நீர்மட்டம் 55.14 அடியாக உயர்வு

செய்திப்பிரிவு

சேலம்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு நேற்று சற்று அதிகரித்து விநாடிக்கு 13,638 கனஅடியானது. அணையின் நீர் மட்டம் 55.14 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2 மாதங்களாக அணைக்கு போதுமான அளவு நீர் வரத்து இல்லாததால் நீர் மட்டம் வேகமாக சரிந்து வந்தது.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து, அம்மாநில அரசு காவிரியில் நீர் திறந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 13,159 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று 13,638 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர் வெளியேற்றத்தை விட, நீர் வரத்து சற்று கூடுதலாக இருப்பதால், அணையின் நீர் மட்டம் 54.70 அடியில் இருந்து, நேற்று 55.14 அடியாக உயர்ந்தது.

நீர் இருப்பு 20.90 டிஎம்சியில் இருந்து, 21.20 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 18-ம் தேதி காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக பதிவானது. 19-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்தது. 20-ம் தேதியும் இதே அளவு நீர்வரத்து தொடர்ந்தது.

இந்நிலையில், நேற்று காலை 6 மணி அளவீட்டின்போதும் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை 7 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

SCROLL FOR NEXT