தமிழகம்

குமரியில் புயல், மழைக்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் உத்தரவு

செய்திப்பிரிவு

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலியான 5 பேரில் குடும்பத்தக்கும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில், 29.11.2017 மற்றும் 30.11.2017 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்தது.

கனமழையின் காரணமாக ராஜாக்கமங்கலம், கார்த்திகை வடலியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் ராஜேந்திரன், கீழபால்கிணற்றான் விளை, சிவசெல்வபுரம் பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகன் குமரேசன், மலையடி, வன்னியூரைச் சேர்ந்த ஜான்ரோஸ் என்பவரின் மகன் அலெக்சாண்டர், மண்டைக்காடு மணலிவிளையைச் சேர்ந்த சரஸ்வதி மற்றும் பறளியார் எஸ்டேட்யைச் சேர்ந்த விமல்சிங் ஆகிய ஐந்து நபர்கள் பலத்த காற்றின் காரணமாக மரம் முறிந்து விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த மேற்கண்ட ஐந்து நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT