திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ. 25 கோடி மதிப்பில் திருப்பணிகளை நேற்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அறநிலையத் துறை ஆணையர் க.வீ.முரளிதரன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் என்.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தமிழகம்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ. 25 கோடி மதிப்பில் திருப்பணிகளை நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம் உள்ளிட்டவற்றை கருங்கல்லால் அமைக்க ஏற்கெனவே இந்து சமய அறநிலையத் துறை முடிவெடுத்தது. அதன்படி, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலின்நிதி ரூ.5 கோடி, உபயதாரர்கள் நிதி ரூ.20 கோடி என, ரூ.25 கோடி மதிப்பில், தேவி கருமாரியம்மன் கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரங்களில் உள்ள அனைத்து உப சந்நிதிகளை கருங்கல்லால் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளை நேற்று கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பொன்னாடை போர்த்தி உபயதாரர்களை கவுரவித்தார்.

பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்ததாவது: மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலைய துறை சார்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் பெருந்திட்ட வரைவு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் நடப்பாண்டில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில் ரூ.200 கோடி மதிப்பில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன; நாகப்பட்டினம் மாவட்டத்தில் அவ்வையாருக்கு மணிமண்டபம், மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு கோயில் மற்றும் கலாச்சார மையம், சோளிங்கரில் மனநல காப்பகம் ஆகியவை ரூ.65 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.

அதேபோல் சென்னை - கொளத்தூரில் சோமநாத சுவாமி கோயில், பழநி தண்டாயுதபாணி கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆகியவை சார்பில், ரூ.30 கோடி மதிப்பில் மூத்த குடிமக்களுக்கு காப்பகங்கள் ஏற்படுத்த உள்ளோம்.

இப்படி இந்து சமய அறநிலைத் துறை, ஒரு புறம் திருப்பணிகள், மறுபுறம் மூத்த குடிமக்கள், கலாச்சார மையங்கள், பண்பாட்டுச் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில், ரூ.1,400 கோடி மதிப்பில் 23 பணிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.வீ.முரளிதரன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் இணை ஆணையர் முல்லை, அறங்காவலர் குழு தலைவர் என்.கே.மூர்த்தி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திருவள்ளூர் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், திருவேற்காடு நகராட்சி தலைவர் என்.இ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT