கோவிலம்பாக்கத்தில் விபத்து ஏற்பட்ட இடத்தில் செங்கை ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் ஆய்வு மேற்கொண்டார். (உள்படம்) லியோரா ஸ்ரீ. 
தமிழகம்

தண்ணீர் டேங்கர் லாரி மோதி மாணவி உயிரிழப்பு: விபத்து நடந்த இடத்தில் செங்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

கோவிலம்பாக்கம்: சென்னை, கோவிலம்பாக்கத்தில் பள்ளிக்குச் செல்லும்போது தாய் கண்முன் தண்ணீர் லாரி ஏறியதில் 5-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த நன்மங்கலம் ராஜாஜி நகர சாய் வெங்கடேஷ். மென்பொருள் பொறியாளர். இவரது மனைவி கீர்த்தி. இவர்களது மகள் லியோராஸ்ரீ (10) கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

நன்மங்கலம் மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில்வே பணிகள் நடந்து வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கீர்த்தி, லியோரா ஸ்ரீயை பள்ளியில் கொண்டுவிட மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது சாலையில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் நின்றதால் பிரேக் பிடிக்கும்போது நிலை தடுமாறி கீர்த்தி இடது பக்கமும், லியோரா ஸ்ரீ வலது பக்கமும் விழுந்தனர்.

அப்போது வந்த தண்ணீர் டேங்கர் லாரி மாணவியின் வயிற்றில் ஏறியது. லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். தாய் கண்முன் உயிருக்கு போராடிய மாணவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், சிறுமியின் உடல் வைக்கப்பட்டிருந்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார்.

மேலும், இச்சாலையில் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், சாலை மிகவும் குறுகலாக உள்ளது. பணிகள் முடிவடைந்துள்ள இடங்களின் நடுவில் சென்டர்மீடியன் அமைத்து இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT