தமிழகம்

சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், புதை மின்வடம் பதிப்புஉள்ளிட்ட பணிகளால் சென்னையில் சாலைகள் போக்குவரத்துக்கு பயன்படாத வகையில் உள்ளன. பெரும்பாலான இடங்களில் சாலையில் குழிகள் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பதால்வாகன ஓட்டிகள் குறுகிய பாதைகளில்கூட பயணிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

முன்பெல்லாம் பணிக்கு செல்லும் நேரங்களில்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆனால் தற்போது சேதமடைந்துள்ள சாலைகளால் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால்வாகன ஓட்டிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். மேலும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் எது பள்ளம், எது சாலை என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில், சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் அமல்படுத்தப்பட்டும்கூட சாலைகள் படுமோசமாக உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துவருகின்றனர். வார்டு கவுன்சிலர்கள் சாலைகளின் நிலையைஅறிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை.

மக்களிடம் வரி வசூலிக்கும் அரசு, சேதமடைந்த சாலைகளைகூட சீரமைக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே சென்னை முழுவதும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி, பயனற்று கிடக்கும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT