பொதுவாக கருத்துக் கணிப்பு முடிவுகளை நான் நம்புவது இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுவாக கருத்துக் கணிப்பின் முடிவுகளை நான் நம்புவது இல்லை என்று ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். என்.டி.டி.வி. சார்பில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் உள்ள மொத்தத் தொகுதிகளில் ஆளுங்கட்சியான அதிமுக 27 தொகுதிகளைப் பிடிக்கும் என்று தெரிவித்தனர்.
அதே நிறுவனத்தின் சார்பில் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில், அதிமுக 25 இடங்களைப் பிடிக்கும் என்றார்கள். தற்போதைய கருத்துக் கணிப்பில், அதிமுகவின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருவதாகவும் 22 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக குடிநீர், மின்வெட்டுப் பிரச்சினை அதிமுகவுக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியிருக்கிறதாம். பல இடங்களில் அதிமுக வேட்பா ளர்கள், அமைச்சர்களுக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்களாம். திமுகவைப் பொருத்தவரை பிப்ரவரியில் 10 இடங்களே கிடைக்கும் என்றார்கள். மார்ச்சில் 11 இடங்கள் என்றார்கள். தற்போது புதிய கருத்துக் கணிப்பில் 14 இடங்கள் என்றும் தேர்தலுக்குள் இது மேலும் அதிகரிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார்.