தமிழகம்

காவேரி மருத்துவமனையில் மூளை, தண்டுவட சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ரேடியல் சாலையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சைக்கான சிறப்புப் பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு இப்பிரிவைத் திறந்து வைத்தார்.

பக்கவாதம் மற்றும் மூளை – நரம்பியல் கோளாறுகள் சமுதாயத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களை பாதித்து வரும் நிலையில், சிறப்பான சிகிச்சையின் மூலம் நோயாளிகளை குணமடையச் செய்ய அனுபவம் மிக்க, சிறப்பு மருத்துவ நிபுணர் குழு இங்கு செயலாற்றுகிறது.

அத்துடன், நவீன மருத்துவ சாதனங்களும் நிறுவப்பட்டுள்ளன. இப்பிரிவில் மூளை கட்டிகள், கால்-கை வலிப்பு, நகர்வு கோளாறுகள் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்புகளுக்குத் தீர்வு வழங்கப்படுகிறது.

காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் ச.சந்திரகுமார் கூறும்போது, “உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடனும் திறமையான நிபுணர் குழுவோடு இணைந்து, மூளை – நரம்பு அறிவியல் துறைக்கான உயர் சிகிச்சைப் பிரிவை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். கால்-கை வலிப்பு, நகர்வு கோளாறுகள் தொடர்பான கல்வி, ஆராய்ச்சி செயல் திட்டங்களை நடத்துவது எங்களது நோக்கமாக இருக்கும்” என்றார்.

இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர்.அரவிந்தன் செல்வராஜ் கூறும்போது, “துல்லியமான நோயறிதல் முறையில் இருந்துதான் வெற்றிகரமான சிகிச்சை தொடங்குகிறது என்பதால், நோயின் பாதிப்பை அறிய துல்லியமான பகுப்பாய்வுக்கு மிக நவீன தொழில்நுட்பத்தை எமது மருத்துவ நிபுணர்கள் பயன்படுத்துகின்றனர்.

மருத்துவ ரீதியில் அதிக சிக்கலான செயல்முறைகள் மற்றும் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசியமான நுட்பமான சிகிச்சைகள் உட்பட, இங்கு கிடைக்கக்கூடிய உயர் தரத்திலான சிகிச்சையின் மூலம் நோயாளிகள் சிறப்பான சிகிச்சைப் பலன்களைப் பெற முடியும்” என்றார். நரம்பியல் துறையின் குழும வழிகாட்டி மற்றும் இயக்குநர் டாக்டர். கே.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூளை மற்றும் தண்டுவட சிகிச்சைக்கான சிறப்பு பிரிவை தொடங்கியிருப்பதன் மூலம் நேர்த்தியான சிகிச்சையை வழங்கும் தனது பாரம்பரியத்தை தொடர்வதை காவேரி மருத்துவமனை குழுமம் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

SCROLL FOR NEXT