கோப்புப்படம் 
தமிழகம்

சாத்தான்குளம் கொலை வழக்கு: எஸ்ஐ ஜாமீன் மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ் ஆகியோர் 2020-ல் விசாசரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகியோரை கொலை வழக்கில் சிபிஐ கைது செய்தது.

இவர்களின் ஜாமீன் மனுக்கள் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து தள்ளுபடியானதால் 9 பேரும் கைதான நாளிலிருந்து மதுரை மத்திய சிறையில் உள்ளனர். கொலை வழக்கு விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.

இந்நிலையில், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 3 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். இரட்டை கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. உடல் நலக்குறைவால் சிறையில் சிரமப்பட்டு வருகிறேன். எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.29-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT