சேலம் / தருமபுரி: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று முதல் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு கடந்த 5 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 17-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரத்து 260 கனஅடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 13 ஆயிரத்து 159 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 54.70 அடியாகவும், நீர் இருப்பு 20.90 டிஎம்சியாகவும் இருந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் பாசனத்துக்கு 6 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் திறப்பு, நேற்று காலை விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரம் கனஅடி நீர் வரத்து: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த 19-ம் தேதி காலை அளவீட்டின் போது விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை அளவீட்டின்போது 13 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக மேலும் அதிகரித்தது.