மதுரை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மாநிலத் தலைவர் என்ற நிலையில் இருந்து தேசியத் தலைவர்களில் ஒருவராக உருவாகிவிட்டதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் முனுசாமி தெரிவித்தார்.
மதுரையில் நேற்று நடந்த அதிமுக மாநாட்டில் தலைவர்கள் பேசியதாவது:
துணை பொதுச் செயலாளர் முனுசாமி: இந்த மாநாடு வெற்றி பெற்றுவிட்டது. இதனால் பொதுச் செயலாளர், மாநிலத் தலைவர் என்ற நிலையிலிருந்து, தேசிய தலைவர்களில் ஒருவராக உருவாகிவிட்டார். தமிழகத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து அவர்களின் அரசியல் வாரிசாக திகழும் பழனிசாமி தேசியத் தலைவராக உருவாகிவிட்டார்.
ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார்:
சித்திரை திருவிழாவை மதுரை கண்டிருக்கிறது. அதேபோல், இது அதிமுகவின் சித்திரை திருவிழா. அழகரை வரவேற்பது போல், பொதுச் செயலாளர் பழனிசாமியை வரவேற்க தொண்டர்கள் கூடியுள்ளனர்.
இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எதிர்பார்த்ததற்கும் மேலாக பல லட்சம் தொண்டர்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து, மாநாட்டு திடலையே குலுங்கச் செய்துள்ளனர். திடலில் கொடி ஏற்றிய பழனிசாமி, விரைவில் கோட்டையில் முதல்வராக கொடி ஏற்றுவார் என்பதை இந்த மாநாடு வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.
சாதி, மதம் கடந்து சமதர்மத்தின் அடையாளமாக அவர் திகழ்கிறார். திமுக ஆட்சியில் தமிழ் மொழி, உரிமை என எல்லாமே அழிந்து கொண்டிருக்கிறது. இதை மீட்டெடுக்கும் தகுதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசி பெற்ற பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது என்றார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ: இந்த இடம் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு. காலையில் பொதுச் செயலாளரிடம் வைரவேல் தந்தோம். திமுக ஆட்சியை சம்ஹாரம் செய்ய அவதாரம் எடுத்துள்ளார் பழனிசாமி. இதற்கு பயன்படுத்தவே வைரவேல் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல… ஆறுசாமியின் மறு வடிவமாக இருக்கிறார் பழனிசாமி.
2010-ல் மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் 10 ஆண்டுகள் திமுகவுக்கு வனவாசம் கிடைத்தது. 2.40 கோடி தொண்டர்களாக இன்று அதிமுக வளர்ந்துள்ளது. திமுக ஆளும் பொறுப்பில் இருக்கும்போதே, இந்த மாநாட்டின் மூலம் அச்சத்தை அளித்துள்ளார் பழனிசாமி. இனி தமிழக முதல்வர் ஸ்டாலின் தூங்கவே மாட்டார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: மக்கள் விரும்பும் முதல்வர் பழனிசாமிதான். கட்சியில் குழப்பம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவர். ஜெயலலிதாவின் ஆண் உருவமாகத் திகழ்கிறார். இம்மாநாடு அதிமுகவுக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.