தமிழகம்

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு உதவும் தாட்கோ

கி.பார்த்திபன்

மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பார்த்தோம். அதேபோல் தமிழக அரசு தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் எஸ். சக்திவேல்.

# தாட்கோ திட்டம் என்றால் என்ன? அதன் மூலம் யாருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது?

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கமே தாட்கோ. அனைத்து மாவட்டங்களிலும் தாட்கோ அலுவலகங்கள் உள்ளன. கடந்த 1976-ம் ஆண்டு முதல் தாட்கோ நிறுவனம் செயல்படுகிறது. ஆதி திராவிடர் மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை வங்கிக் கடனுதவியுடன் தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. பழங்குடியினருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

# தாட்கோவில் செயல்படுத்தப்படும் திட்டங்களை எவ்வாறு அறிவது?

நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்களில் தாட்கோ திட்டங்கள் குறித்து விளம்பரப்படுத்தப்படுகின்றன. தவிர, அந்தந்த மாவட்டங்களில் உள்ள தாட்கோ அலுவலகங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தாட்கோ-வுக்கு விண்ணப்பிப்பது குறித்த விவரங்களை அவ்வப்போது பத்திரிகைகளுக்கு செய்திகளாக அறிவிப்பார்கள்.

# தாட்கோ திட்டத்தின்கீழ் எதற்கு கடனுதவி வழங்கப்படுகிறது?

தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2.25 லட்சம் - இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். மானியம் நீங்கலாக திட்டத்தொகையில் மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும்.

# தாட்கோ தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? வேறு ஏதேனும் நிபந்தனைகள் இருக்கின்றனவா?

18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வித் தகுதி அவசியம் இல்லை. முன் அனுபவம் இருந்தால் போதும்.

# இதற்கான விண்ணப்பம் எங்கு கிடைக்கும்?

அனைத்து தாட்கோ அலுவலகங்களிலும் தாட்கோ தொழில் முனைவோர் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். http://application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

# விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் எவை?

சாதிச் சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல் அல்லது வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை, விலைப்பட்டியல் மற்றும் வங்கிக் கேட்கும் பிற ஆவணங்களை இணைக்க வேண்டும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

SCROLL FOR NEXT