தமிழகம்

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ஜி-20 சுற்றுலா உச்சி மாநாடு தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சுற்றுலா குறித்த 3 நாள் ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களை சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சுற்றுலா குறித்த ஜி-20 உச்சி மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழக சட்டத் துறை செயலர் கார்த்திகேயன், சட்டக் கல்வி இயக்குநர் விஜயலட்சுமி ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு, பசுமை சுற்றுலா, திரைப்பட சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை குறித்தும், உலக அளவில் சுற்றுலா துறையில் இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆலோசித்தனர்.

மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. இதில் சுற்றுலா பங்குதாரர்கள், கொள்கை உள்ளிட்டவை குறித்து குழு விவாதம் நடைபெற உள்ளது. மாநாடு நாளை (ஆக.22) நிறைவடைகிறது. நிறைவு விழாவில் தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுபேச உள்ளார். குழு விவாதத்தில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.46 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT