கடலூர்: திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.6 கோடி முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டு, கடலூர் கோட்டாட்சியர் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியான உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகளின் மகன், மகள் கல்லூரியில் படிக்க உதவித்தொகை, விவசாயிகளின் மகன், மகள் திருமண உதவித்தொகை, உயிரிழந்த விவசாயிக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உதவித் தொகை கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல், இந்த தொகை வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அகிலா என்பவர், சில கணக்குகளை மாற்றம் செய்து தனது வங்கிக் கணக்கிலும், தனது உறவினர்களின் வங்கிக் கணக்கிலும், பயனாளிகளின் உதவி தொகைகளை மாற்றி முறைகேடாக எடுத்துக் கொண்டதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்றன.
தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் ரூ.6.75 கோடி அளவில் இந்த கையாடல் நடைபெற்றது தெரியவந்தது. இந்த முறைகேட்டில் அகிலா மற்றும் அந்த அலுவலகத்தில் உள்ள மற்றும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த, கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் விசாரணை தொடங்கியது.
இந்த விசாரணையில் கணினி ஆபரேட்டர் அகிலா, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜராயினர். அவர்களிடம் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தீவிர விசாரணை மேற்கொண்டார். அப்போது பயனாளிகளின் உதவித்தொகை வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2-வது நாளாக நேற்றும் விசாரணை தொடர்ந்தது. இன்றும் விசாரணை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
விசாரணையின் முடிவுக்குப் பின் முறையாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.