சென்னை: தொழிலதிபரான பழனி ஜி.பெரியசாமிக்குச் சொந்தமான அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், சென்னை, கோவையில் லீ மெரிடியன் ஹோட்டல்களை நடத்தி வருகிறது.
இந்நிறுவனம், இந்திய சுற்றுலாக் கழகத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.18 கோடியை செலுத்தவில்லை என்று கூறி தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, இந்நிறுவனத்துக்கு எதிராக திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனம் சார்பில் எம்.கே.ராஜகோபாலன் ரூ.423 கோடிக்கு இந்த ஹோட்டல்களை ஏலத்தில் எடுக்க தீர்ப்பாயமும் ஒப்புதல் அளித்தது.
இதை எதிர்த்து அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத் தலைவர் பழனி ஜி.பெரியசாமி, தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்தை எம்ஜிஎம் நிறுவனம்ரூ.423 கோடிக்கு ஏலத்தில் எடுக்க ஒப்புதல் அளிப்பது சட்ட விரோதமானது என்றும், தனது கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ.450 கோடியை வங்கியில் டெபாசிட் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதை ஏற்ற மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், லீ மெரிடியன் ஹோட்டல்களை விலைக்கு வாங்க எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை ரத்து செய்தது. இதை எதிர்த்து எம்ஜிஎம் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் தேசியகம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான் என்று கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது.
சீராய்வு செய்ய காரணமில்லை: இந்த தீர்ப்பை எதிர்த்து எம்ஜிஎம் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மறு சீராய்வு செய்ய எந்தக் காரணமும் எழவில்லை என்று கூறி, எம்.ஜி.எம் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.