தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. என பெரிய கட்சி கூட்டணிக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. 1998-ம் ஆண்டு தேர்தலைப் போன்று தனித்து விடப்பட்டு விடுவோமோ என்ற பீதியிலும் உள்ளனர் அதன் தலைவர்கள். அந்த தேர்தலில், திருநாவுக்கரசின் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க கட்சி உடன் நின்றது. இப்போது, அதுபோல சின்ன கட்சிகூட தன்னுடன் வராமல்போய்விடுமோ என்ற பயமும் காங்கிரஸ் தலைவர்களுக்கு கூடுதலாகவே உள்ளது.
இந்நிலையில், இவங்க எப்போ தலைவரை நியமித்து, அந்த தலைவர் எப்போ நிர்வாகிகளை அறிவித்து, அவர்கள் எப்போ பூத் கமிட்டிகளைப் போட்டு எப்படி தேர்தலைத் சந்திக்கப் போகி றோமோ? என்று பரிதாபத்துடன் விழித்துக் கொண்டிருக்கிறது கோவை காங்கிரஸ். இந்த விழிப்பில், வாசன் கோஷ்டியினர் முழுவதுமாக கைகழுவிவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கடந்த 2006 தேர்தலுக்கு முன்பு வரை வாசன் அணியே பலம் பொருந்தி காணப்பட்டது. கோவை மாநகரம், கோவை தெற்கு, கோவை வடக்கு என 3 கட்சி மாவட்டத் தலைவர்களாக வாசன் கோஷ்டியினரே இடம் பிடித்திருந்தனர்.
பலம் மிகுந்த பிரபு
2006க்குப் பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பிரபுவின் கை ஓங்கியது. அவர் 3 கட்சி மாவட்டங்களை கோவை மாநகர், கோவை புறநகர் என்று சுருக்கி இதற்கு தனது ஆதரவாளர்கள் சின்னையன், மனோகரன் என்பவர்களை தலைவர்களாக நியமித்தார். இதனால் இருவேறு அணிகளுக்குள் கைகலப்பு, வேஷ்டி கிழிப்பு எல்லாம் நடந்து முடிந்தது. இருந்தும், பிரபுவை யாருமே அசைக்க முடியவில்லை.
இதன் எதிரொலியாக, கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் கோவை எம்.பி. தொகுதியில் போட்டியிட்ட பிரபுவுக்கு எதிராக வாசன் கோஷ்டி செயல்பட்டது. இது பிரபுவின் தோல்விக்கு முக்கியக் காரணமானது.
கோவையில் போட்டியிட முடிவு
இந்த முறையும் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். எந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தாலும், தனித்துப் போட்டியிட்டாலும் பிரபுவுக்குத் தான் கோவை தொகுதி என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
எனவே, தான் போட்டியிடும் தொகுதியில் மாவட்டத் தலைவராக தன் ஆதரவாளர்களே இருக்க வேண்டும் என்பதே பிரபுவின் விருப்பம். இங்குள்ள வாசன், சிதம்பரம் அணியினர் கட்சி, மாவட்டத்தை 3 ஆகப் பிரித்து ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு கோஷ்டி வீதம் தலைவர் பதவியை தர வேண்டும் என்று கோரி வந்தனர். இதனால் எழுந்த சச்சரவில் சமீபத்தில் அனைத்து மாவட்டத் தலைவர்களை அறிவித்த மேலிடத் தலைவர்கள், கோவை மாநகர மாவட்டத்துக்கு மட்டும் தலைவராக மனோகரனை (பிரபுவின் ஆதரவாளர்) அறிவித்துவிட்டு புறநகர் தலைவர் யார் என்பதை தொங்கலில் விட்டுவிட்டனர்.
இந்த புறநகர் மாவட்டம் பழையபடி தெற்கு, வடக்கு என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. அதில் ஒன்று வாசன் அணிக்கும், இன்னொன்று பிரபு அணிக்குமாக பஞ்சாயத்து நடந்து வருகிறது. அதில்தான் விரக்திக் குரல்கள் காங்கிரஸில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.