ராமேசுவரம்: இலங்கையில் உள்ள நெடுந்தீவில் கரை ஒதுங்கிய 11 தமிழக மீனவர்களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்தனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பதிவு எண் இல்லாத விசைப்படகு அனுமதிச் சீட்டு பெறாமல் நெடுந்தீவு அருகே கரையை ஒட்டி மீன்பிடித்து கொண்டிருந்தபோது தரை தட்டி பழுதடைந்தது.
படகிலிருந்த ரமேஷ், அமல தீபன், கெர்சின் ரிஷப், ஹென்றி ரோகித், ஜான் ரிச்சர்ட், வெள்ளைச்சாமி, அந்தோணி ஆனந்த், ரோகன், சீமன், ஆரோக்கிய அசோக், பெரியகருப்பன் ஆகிய 11 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வியாழக்கிழமை காலையில் கரையேறினர். அவர்களை நெடுந்தீவு மீனவர்கள் மீட்டு நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு கைது செய்யப்பட்ட மீனவர்கள், யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.