சென்னை: நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதிஇஸ்ரோ விண்ணில் செலுத்தியது.அதன்பின் பூமியை சுற்றிவந்தவிண்கலம் ஆக.1-ம் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. தொடர்ந்து 5 நாள் பயணத்துக்கு பின் கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான் நுழைந்தது.
இதையடுத்து சந்திரயானின் சுற்றுப்பாதை உயரம் 4 முறை குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகேவிண்கலம் கொண்டு செல்லப்பட்டது. நிலவின் தரையில் இருந்து 153கி.மீ உயரத்தில் இருக்கும்போது சந்திரயானின் உந்துவிசை கலனில்இருந்து லேண்டர் நேற்று முன்தினம்வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
அதன்பின் உந்துவிசை கலன்,லேண்டர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவை ஒட்டிய சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்தன. இனி உந்துவிசை கலன் தொடர்ந்து அடுத்த சில மாதங்களுக்கு நிலவைசுற்றிவந்து ஆய்வு செய்யும்.
மறுபுறம் லேண்டர் உயரத்தை படிப்படியாகக் குறைத்து நிலவில் தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டிவருகிறது. அதன்படி முதல்கட்டமாக லேண்டரில் உள்ள திரவ வாயு இயந்திரம் சில விநாடிகள் இயக்கப்பட்டு அதன் சுற்றுப்பாதை உயரம் நேற்று மாலை 3.50 மணியளவில் குறைக்கப்பட்டது. தற்போது குறைந்தபட்சம் 113 கி.மீ.,அதிகபட்சம் 157 கி.மீ. தொலைவுகொண்ட சுற்றுவட்டப் பாதையில் நிலவை லேண்டர் சுற்றி வருகிறது.
அதாவது நிலவின் தரைப்பகுதியில் இருந்து 113 கி.மீ உயரத்தில் லேண்டர் உள்ளது. தொடர்ந்து லேண்டரின் சுற்றுப்பாதை உயரம்நாளை (ஆக.20) மேலும் சுருக்கப்பட்டு நிலவுக்கு அருகே கொண்டு வரப்படும். அவ்வாறு லேண்டர் நிலவுக்கு நெருக்கமாக வந்ததும் எதிர்விசை நடைமுறையைப் பயன்படுத்தி அதன் வேகத்தை படிப்படியாகக் குறைத்து ஆக.23-ம் தேதி மெதுவாக தரையிறக்கப்படும்.
லேண்டர் தரையிறங்கிய சிலமணி நேரத்துக்குப் பின்னர் அதிலுள்ள ரோவர் வாகனம் வெளியேவந்து தனது ஆய்வை மேற்கொள்ளும். தற்போது, லேண்டர் கலனின் இயக்கம் சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, லேண்டர் எடுத்தபல்வேறு துல்லிய புகைப்படங்களின் தொகுப்பை இஸ்ரோ நேற்றுவெளியிட்டது. அதில் நிலவில் தரையிறங்க உள்ள இருள் நிறைந்ததென்துருவப் பகுதிகளை லேண்டர் தன்னிடம் உள்ள எல்பிடிசி கேமராமூலம் ஆக.15-ல் எடுத்த படங்களைஅனுப்பியுள்ளது. அவற்றை ஆராய்ந்து தரையிறங்குவதற்கான சரியான இடம் தேர்வு செய்யப்படும்.
அதேபோல், ஆக.17-ல் உந்துவிசை கலனில் இருந்து பிரிந்ததும் லேண்டர் எல்-1 கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஃபேப்ரி பள்ளம், ஹர்கேபி பள்ளம், ப்ரூனோ பள்ளம் என சமதளமற்ற நிலவின் மேற்பரப்பை நம்மால் தெளிவாகக் காணமுடிகிறது.