வேலூர் விஐடி பல்கலை.யில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் மாணவிக்குப் பட்டம் வழங்கிய மத்திய சாலைப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங். உடன், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன் 
தமிழகம்

கடந்த 9 ஆண்டுகளில் 162 நாடுகள் இந்தியாவில் 62 துறைகளில் முதலீடு: மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தகவல்

செய்திப்பிரிவு

வேலூர்: இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 162 நாடுகள் 62 துறைகளில் முதலீடு செய்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறினார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. 8,619 மாணவர்கள் பட்டம் பெற்ற இந்த விழாவுக்கு, பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். அவர் பேசும்போது, ‘‘இந்தியாவில் பள்ளிக்கல்வி நன்றாக உள்ள நிலையில், உயர்கல்வியில் பின்தங்கியுள்ளோம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கீடு செய்யும் நிலையில், ஏழை மாணவர்கள் அனைவரும் உயர் கல்வி பயிலமுடியும். வங்கி கல்விக் கடன்களின் வட்டியையாவது அரசு ஏற்க வேண்டும். உயர் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி, மருத்துவக் கல்வியில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் மருத்துவம் படிக்க ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், நாட்டில் 700 மருத்துவக் கல்லூரிகளில் ஒரு லட்சம் மருத்துவ இடங்கள்தான் உள்ளன. எனவே, எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிப்பதால், கூடுதலாக 3 முதல் 4 லட்சம் பேர் மருத்துவம் பயில வாய்ப்புள்ளது’’ என்றார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: கற்றதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் கல்வி அமையும். மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படாமல், அவற்றைக் கையாள கற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசு மக்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல் வடிவம் பெறும்போது, இன்னும் அதிக மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாகும். உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5 சதவீதமாக உள்ளது. இதனால், உலக நாடுகள் இந்தியாவை கவனிக்கின்றன. வரும் 2047-ம் ஆண்டுக்குள் உலகின் முதல்பொருளாதார நாடாக உயரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2015-ல் இந்தியாவில் 428 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது தினசரி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்படும் விகிதத்தில், உலகளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய பல்வேறு நாடுகள் ஆர்வம்காட்டுகின்றன. இந்தியாவின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கை காரணமாக கடந்த 9 ஆண்டுகளில் 62 துறைகளில் 162 நாடுகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முதலீடு செய்துள்ளன.

நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு, மாணவர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். வெற்றிக்காக குறுக்கு வழிகளில் செல்ல வேண்டாம். அறிவாற்றாலைப் பயன்படுத்தி, கடின உழைப்பு, தொடர் முயற்சியால் வெற்றி இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விப்ரோ நிறுவன சர்வதேச வர்த்தக தலைமை அதிகாரி (இயக்கம்) சஞ்சீவ் ஜெயின் கவுரவ விருந்தினராகப் பங்கேற்றார். விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், துணைவேந்தர் ராம்பாபு கோடாளி, இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT