மதுரை: மதுரையில் நாளை (ஆக. 20) நடைபெற உள்ள அதிமுக மாநில மாநாட்டுக்கு ஏற்பாடுகள் தயாராகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் நடைபெறும் மாநாட்டுக்கான மேடை, பந்தல், தொண்டர்களுக்கு உணவு வழங்கும் இடம், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. மாநாட்டுப் பந்தல் வளாகத்தில் 3 லட்சம் தொண்டர்கள் நாற்காலிகளில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டு நிகழ்ச்சிகள் எல்இடி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. பந்தலைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. காலை 7.45 மணிக்கு 51 அடி உயர கொடிக் கம்பத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி கட்சிக் கொடியேற்றி, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். ஜெயலலிதா பேரவை மற்றும் பிற அணிகளின் தொண்டர்கள் 3,000 பேர் அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர்.
பின்னர் மாநாட்டுப் பந்தலைத் திறந்துவைக்கும் பழனிசாமி, நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள அதிமுக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மாநாட்டின் பிரதான நிகழ்ச்சிகள் மாலை தொடங்குகின்றன. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 5 பேர், மதுரை மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் கே.ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் பேசுகின்றனர். பின்னர், பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்புஉரையாற்றுகிறார்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று (ஆக. 19) மாலை பழனிசாமி மதுரை வருகிறார். தமிழகம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள் நேற்றே மதுரையில் குவியத் தொடங்கிவிட்டனர்.
தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்களை அழைத்து வரும்பொறுப்பு, மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 10 தென் மாவட்டங்களில் இருந்து மட்டும் 4 லட்சம் பேர் பங்கேற்க ஏறபாடு செய்துள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 1,500 வாகனங்களில் தொண்டர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், சுமார் 10 லட்சம்பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனு தள்ளுபடி: இதற்கிடையில், காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘மதுரை விமான நிலையம் அருகே அதிமுக மாநாடு நடைபெறுவதால், விமானம் தரையிறங்குவதில் இடையூறு ஏற்படும்.மேலும், கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மாநாட்டுக்கு மதுரை விமான நிலையஅதிகாரியிடம் தடையின்மை சான்றுபெறவில்லை. எனவே, மாநாடுநடத்த தடை விதிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன், தினேஷ்பாபு வாதிடும்போது, “மாநாட்டில் பட்டாசு வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி வழங்கிஉள்ளோம். மேலும், காவல் துறை, விமான நிலைய ஆணையக் குழுவிடம் அனுமதி பெற்றுள்ளோம்” என்றனர்.
பின்னர், “மாநாட்டுக்கு தடைகோரி கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடினால், நிவாரணம் வழங்க முடியாது” என்று கூறி, நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.