தமிழகம்

திமுக பகுதி செயலாளர் - கவுன்சிலர் இடையே திருப்பூரில் மோதல்: இரு தரப்பினரும் மாறி மாறி புகார்

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரில் 45-வது வார்டு கவுன்சிலருக்கும், திமுக பகுதி செயலாளருக்கும் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், இரு தரப்பினரும் மாறிமாறி புகார் தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 45-வது வார்டு கவுன்சிலர் பாத்திமா தஸ்ரின். இவரது தந்தையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவருமான சையது முஸ்தபா நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவிடாமல், திமுக பகுதி செயலாளர் உசேன் தடுத்து வருகிறார்.

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுக்கிறார். 45-வது வார்டில் அனைத்து பணிகளையும் திமுக செய்ததாக காட்டிக்கொள்ள அவர் முயற்சிக்கிறார்’’ என குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக, திமுக பகுதி செயலாளர் உசேன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாவட்ட தலைவர் சையது முஸ்தபா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமுமில்லை. என் மீது பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்து வருகிறார். கவுன்சிலரான பிறகு பாத்திமா தஸ்ரின், பெங்களூருவில் தனது சொந்த பணியை கவனிக்க சென்று விட்டார்.

மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க மட்டும் அவர் வருகிறார். பின்னர் மீண்டும் பெங்களூருவுக்கு சென்று விடுகிறார். இதுவரை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, எந்த கள ஆய்வையும் அவர் மேற்கொள்ளவில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT