தமிழகம்

குடியிருப்புகள், வணிக கட்டிடங்களில் குடிநீர் அளவு மானி பொருத்த திட்டம்: தண்ணீர் வீணாவதைத் தடுக்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குழாய் மூலம் வழங்கும் குடிநீர் வீணாவதைத் தடுக்க குடியிருப்புகள், வணிகக் கட்டிடங்களுக்கு குடிநீர் அளவு மானியைப்பொருத்த திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் சுமார் 80 லட்சம் பேர் வசிக்கின்றனர். 12 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். குடியிருப்புகள், நிறுவனங்கள் என 8 லட்சத்து 42 ஆயிரம் குடிநீர் இணைப்புகளைச் சென்னை குடிநீர் வாரியம் வழங்கியிருக்கிறது. இதன் மூலம் தினமும் சுமார் 1000 மில்லியன் லிட்டருக்கு மேல் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 1000 லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்ய தோராயமாக ரூ.43-ம், ஏரிகளில் உள்ள நீரைச்சுத்திகரித்து, அவற்றை வீடுகளுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் வரை 1000 லிட்டருக்கு ரூ.25-ம்செலவாகிறது. ஆனால், சென்னைகுடிநீர் வாரியம் இதுநாள் வரை எவ்வளவு நீரைப் பயன்படுத்தினாலும் குடியிருப்புகளிடம் மாதம் ரூ.84 மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறது.

பல வீடுகளில் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதில்லை. இதனால் மாநகரின் குடிநீர் ஆதாரம் விரைவாக காலியாகிறது. உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது. குடிநீர் வீணாக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை குடிநீர் வாரியம் வணிகக்கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு குடிநீர் அளவுமானியைப் பொருத்த திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: குடிநீர் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு, மக்கள் பயன்படுத்தும் நீரின் அளவை கணக்கிட, அனைத்து வணிகக் கட்டிடங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு மேம்பட்ட அளவுமானி பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஒப்பந்த ஆவணங்களைத் தயாரித்து வருகிறோம். வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, அளவு மானிகளைப் பொருத்தும் பணிகள் தொடங்கப்படும்.

தற்போது பெரும்பாலான வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களில் அளவில்லாத நீர் விநியோகத்தைப் பெறுகின்றனர். ஒவ்வொரு குடியிருப்பும் எவ்வளவு நீரைப் பயன்படுத்தினாலும் ஒரு மாதத்துக்கு நிலையாக ரூ.84 செலுத்துகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வணிக மற்றும் அதிக அளவு குடிநீர் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்காக சுமார் 21 ஆயிரம் அளவு மானிகள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கு 500 கிலோ லிட்டர் வரை (ஒரு கிலோ லிட்டர் என்பது 1000 லிட்டர்) ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.114, கல்வி நிறுவனங்களுக்கு ரூ.94, பிற நிறுவனங்களுக்கு ரூ.81 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படிப்படியாக அனைத்து அடுக்குமாடி, வணிக பிரிவுகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் அளவுமானிகள் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

சென்னை குடிநீர் வாரியத்தின் இந்த முடிவு குறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் மற்றும் சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் போன்ற பதவிகளை வகித்த குடிநீர் விநியோகத்தில் மிகுந்த அனுபவம் பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்த ஷீலாநாயர் கூறியதாவது:

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய மாநகரமான சென்னையில் குடிநீர் மிகக் குறைந்த விலைக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. பலர் கார்களை கழுவவும், வீட்டுத் தோட்டங்களுக்குப் பாய்ச்சவும், வீட்டு நீச்சல் குளத்தை நிரப்பவும் சென்னை குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குடிநீரைப் பயன்படுத்துகின்றனர். ஏழை மக்களுக்கும், இவர்களுக்கும் ஒரே கட்டணத்தை வாரியம் வசூலித்து வருகிறது. இது ஏற்புடையதாக இல்லை.

அதனால் சென்னை மாநகரில் குடிநீர் அளவு மானியை நிறுவ வேண்டியது அவசியமான ஒன்று. அதே நேரத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அளவு மானியைப் பொருத்தினால் நிச்சயம் வாரியத்தின் குடிநீர் விநியோகஅளவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT