சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: கோயம்பேடு வணிக வளாகம்85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை திருமழிசைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பேரிடர் காலத்தில் கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டு, தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டபோது, அதனால், ஏற்பட்ட இழப்புகளும்இடையூறுகளும் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் ஏராளம்.
கோயம்பேடு வணிக வளாகத்தை மீண்டும் திருமழிசைக்கு மாற்ற தனியார் நிறுவனம் ஒன்றிடம் சிஎம்டிஏ ஆலோசனைகள் கேட்டிருப்பதாகவும், கோயம்பேடு வணிக வளாகத்தில் பல்வேறு வகை மேம்படுத்தப்பட்ட வளாகம்ஒன்றை உருவாக்க முயல்வதாகவும் தெரியவருகிறது. இதனால் கோயம்பேடு சந்தையில்,வணிகம் செய்து வருபவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
எனவே, அப்படி ஒரு திட்டம் அரசிடம் இருந்தால் அதை கைவிட்டு வியாபாரிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய்,கனி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, “கோயம்பேடு சந்தை சுய நிதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இது ஒன்றும் அரசுக்கு சொந்தமானது இல்லை. இந்த சந்தையை நம்பி ஒரு லட்சம் குடும்பங்கள் உள்ளன.
எங்கள் தொழில் இரவில்நடைபெறுகிறது. காலையில் முடிந்துவிடுகிறது. இந்த சந்தையால் மாநகரில் எந்தவித போக்குவரத்து நெரிசலும் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த சந்தை யாருக்கும் தொந்தரவாகவும் இல்லை. எனவே இதையாராலும் திருமழிசைக்கு மாற்றமுடியாது” என்றார்.
இதுகுறித்து கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு அதிகாரிகளிடம் கேட்டபோது, “சந்தையை திருமழிசைக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை. அது தவறான தகவல். அதை யாரும் நம்பவேண்டாம். பீதியும் அடைய வேண்டாம்” என்றனர்.