`என் மண் என் தேசம்' இயக்கத்துக்காக வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் பிடி மண் எடுக்க வந்த பாஜகவினரை கோயிலுக்கு அனுமதிக்காமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட பாஜகவினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

‘என் மண் என் தேசம்’ இயக்கத்துக்காக கோயிலில் மண் எடுக்க முயன்ற பாஜகவினர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ‘என் மண் என் தேசம்’ இயக்கத்துக்காக வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் பிடி மண் எடுக்க முயன்ற பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 30-ம் தேதி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவாக ‘என் மண் என் தேசம்' என்றஇயக்கம் தொடங்கப்பட உள்ளது என்றும், இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகளும் டெல்லிக்கு கொண்டு வரப்படும் என்றும், அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச்சின்னம் அருகே அமுத பூங்கா உருவாக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில், அகத்தீஸ்வரர் கோயிலில் பாஜகவினர் தரிசனம் செய்துவிட்டு, கோயிலில் இருந்து ஒரு பிடி மண்எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற இருந்தது.

‘என் மண் என் தேசம்’ இயக்கத்துக்கு தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம்,இதில் கலந்துகொள்ள வந்தார். அப்போது பாஜகவினரை கோயிலுக்குசெல்ல விடாமல் தடுப்புகள் அமைத்து போலீஸார் தடுத்தனர். இதனால்,போலீஸாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT