நாங்குநேரியில் சிறுவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து விசிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். படம்: எஸ்.சத்தியசீலன் 
தமிழகம்

நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்: பள்ளியில் சாதிய வன்மத்தை தடுக்க திருமாவளவன் கோரிக்கை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சின்னத்துரை என்ற பிளஸ் 2 மாணவரையும், அவரது தங்கையையும் அதே பள்ளியில் உடன் படிக்கும் சக மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், கட்சியினர் உட்படஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சாதிய வன்முறைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: நாங்குநேரி சம்பவத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிசந்துரு தலைமையில் ஓர் ஆணையத்தை தமிழக முதல்வர் நியமித்திருக்கிறார்.

அது நாங்குநேரி சம்பவத்தை மட்டும் ஆய்வு செய்வதாக இல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் வெறுப்பு அரசியலை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

SCROLL FOR NEXT