சென்னை: கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைவு தொடர்பாக தமிழக கடலோர மாவட்டங்களில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஜேசுரத்தினம் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,“கடலோர மண்டல மேலாண்மை திட்டம் 2019-ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள திட்ட வரைபடம், கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019-ன் வழிமுறைகளைப் பின்பற்றாமல் இது வெளியிடப்பட்டுள்ளது.
மீனவ மக்களின் அடிப்படை வாழ்வாதார இடங்களான ஆறு, கடல், கடலில் மீன் பிடிக்கும், மீன் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள், மீனவர்களின் பொது சொத்துகளான பெரிய வலை இழுக்கும் இடங்கள், மீன் விற்கும் சந்தை, வலையைக் காயவைக்கும் இடங்கள், கிராம சாலைகள் போன்றவை கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தில் சட்டப்படி பதிய வேண்டும். ஆனால் மாவட்டங்களில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில் இவை பதியப்படவில்லை.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 18-ம் தேதி கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. வரைபடத்தைத் திருத்தாத நிலையில், கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த அமர்வு, ``கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைவு முழுமை பெறாமல்உள்ளது. எனவே முழுமையான திருத்தப்பட்ட கடலோர மேலாண்மை திட்ட வரைவை, மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மாநில கடலோர மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர் நேரில் ஆஜராகி, கடலோர மேலாண்மை திட்ட வரைவு முழுமை பெறவில்லை என்பதை ஏற்றுக்கொண்டார். அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து வரைவு திட்டத்தை 100 சதவீதம் முழுமை பெறச் செய்ய சாத்தியமில்லை. குறைபாடுகள் குறித்து, குறிப்பிட்டுச் சொன்னால் அதை நிவர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
திட்ட வரைவு தொடர்பாக ஏற்கெனவே கடலோர மாவட்டங்களில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த ஆக.18 முதல் 31-ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது. இதில், செங்கை மாவட்டத்தில் 18-ம் தேதிஅறிவிக்கப்பட்ட கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
எனவே, கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைவு தொடர்பாக தமிழக கடலோர மாவட்டங்களில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது. திட்ட வரைவை இறுதிசெய்ய உரிய விவரங்களை மீன்வளத் துறை வழங்க மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அறிவுறுத்த வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 10-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.