தமிழகம்

8-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் பெண் குழந்தைகளுக்கான நிதி எங்கே போனது?- கனிமொழி காட்டம்

செய்திப்பிரிவு

பள்ளி இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் 8-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசின் உதவித் தொகை கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக், "தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த குடும்பங்களில் பெண் குழந்தைகளின் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிடும் பழக்கம் பரவலாக உள்ளது.

எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் என்ற எண்ணமே அதிகம் உள்ளது. அம்மாணவிகள் தொடர்ந்து படிக்க ஊக்கம் அளிக்கும் வகையில் எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பவர்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது.

தமிழ்நாட்டில் யாருக்குமே இந்த உதவித் தொகை கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் மாநில அரசு, 2011 முதல் 2016 வரையிலான பயனாளிகளின் பெயர்ப் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பவே இல்லை! பலமுறை கேட்டும் பட்டியல் கிடைக்கவில்லை என்பதால் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை பயன்படுத்தப்படாமல் மீண்டும் மத்திய அரசாங்கத்திற்கே சென்றுவிட்டது. இப்போது மதுரை உயர்வ்நீதிமன்றம், பயனாளிகளுக்கு உதவித்தொகை உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இப்பொழுதாவது மாநில அரசாங்கம் விழித்துக்கொள்ள வேண்டும். இனியும் தாமதம் செய்தால் பல மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படும். உடனே மாணவிகளுக்கு உதவித் தொகை கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய காலத்தில் உதவித் தொகை கிடைத்தால் மட்டுமே அது மேலும் படிப்பைத் தொடர்வதற்குப் பயன்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT