கரூர்: கரூர் அருகே கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்.பி. ஜோதிமணியிடம் கிராம பிரமுகர் ஒருவர் வாக்குவாதம் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கரூர் அருகேயுள்ள மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி ஆக.15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கரூர் எம்.பி. ஜோதிமணி சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டார்.
அவரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர், ‘‘தேர்தலில் ஓட்டு கேட்க மட்டும் வந்தீங்க. வெற்றி பெற்ற பிறகு இப்போது தான் வந்துருக்கீங்க.
என்ன செய்து கொடுத்தீங்க?: அதுவும் தேர்தல் வரப்போகுதுன்னு வந்துருக்கீங்க. தேர்தல் வந்தால் தான் ஞாபகம் வருமா? போன் செய்தாலும் எடுப்பதில்லை. எங்கள் ஊருக்கு என்ன செய்து கொடுத்துருக்கீங்க?’’ என கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்.
அதற்கு எம்.பி. ஜோதிமணி, ‘‘கரூர் மக்களவைத் தொகுதியில் 6,600 குக்கிராமங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தும், மனுக்களை பெற்று குறைகளை கேட்டும் வருகிறேன். நீங்கள் பிரச்சினை செய்வதற்காகவே வந்திருக்கீங்க. இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.
நாடாளுமன்றம் போகனும்: பஞ்சாயத்து தலைவர் போல ஒரு எம்.பி. வர முடியாது. நீங்கள் பேசுவதையே திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்காதீங்க. நான் சொல்வதை கேளுங்க.
ஒரு எம்.பி. 100 நாட்கள் பார்லிமென்ட் செல்லவேண்டும். கமிட்டி கூட்டங்களுக்கு 50 நாட்கள் செல்லவேண்டும். இதற்கு இங்கிருந்து சென்று, திரும்ப ஒவ்வொரு நாளாகும்’’ என பேசிக் கொண்டே இருக்க, கேள்வி கேட்ட நபரும் அவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அந்த நபரை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.