கோவை: கோவை குரும்பபாளையம் முதல் திம்பம் வரையிலான வழித்தடத்தை 4 வழிப் பாதையாக அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர். இத்திட்டத்துக்காக நிலம் கையகப் படுத்த ரூ.639.19 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கோவையில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலைகளில் சத்திய மங்கலம் (சத்தி) தேசிய நெடுஞ்சாலை முதன்மையானதாகும். இச்சாலையில் ஏராளமான குடியிருப்புகள், பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளன. இச்சாலை கோவையில் இருந்து அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், பண்ணாரி, திம்பம் வழியாக மைசூர் செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலைத்துறையினரின் கணக்கீட்டின் படி, இச்சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனப் போக்குவரத்து அதிகரிப்பின் காரணமாகவும், பொதுமக்களின் நீண்ட கால வலியுறுத்தலின் அடிப்படையிலும் இச்சாலையை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர்.
அதனடிப்படையில், குரும்ப பாளையத்தில் இருந்து திம்பம் வரை 96 கிலோ மீட்டர் தூர சாலையை, 4 வழிச் சாலையாக அகலப்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தேசிய நெடுஞ்சாலை எண் 948 என்பது மைசூரில் தொடங்கி சத்தி வழியாக கோவையில் முடிவடைகிறது.
இச்சாலை சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி, திம்பம் வரை 96 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிப் பாதையாக அகலப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக 30-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் இருந்து ஏறத்தாழ 650 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
நிலத்துக்காக மட்டும் ரூ.639 கோடியே 18 லட்சம் தொகையை மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்த தனி மாவட்ட வருவாய் அலுவலர், தனி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரை நியமிக்க தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.