சென்னை: மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னை நகர சாலையோர விற்பனை குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபார முறைப்படுத்துதல் சட்டம் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்டது. இந்தசட்டத்தைப் பின்பற்றி, கடந்த 2015-ம் ஆண்டு தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல் விதிகளைத் தமிழக அரசு உருவாக்கியது.
இதன்படி, சென்னையில் தெருவோர நகர வியாபாரிகள் குழுவானது மாநகராட்சி ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிதழில் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: குழுவின் தலைவராக மாநகராட்சி ஆணையரும், சென்னை மாநகராட்சியின் நகர மருத்துவ அதிகாரி, சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர், போக்குவரத்து காவல்துணை ஆணையர், தலைமை பொறியாளர் (பொது) ஆகியோர் அரசு சார்ந்த உறுப்பினர்களாகவும், வணிகர் சங்கத்தைச் சேர்ந்தஉறுப்பினராக எஸ்.நாகபூஷணம், அரசு சாரா மற்றும் சமூகம் சார்ந்த சங்கங்களின் உறுப்பினர்களாக டி.சங்கர் மற்றும் ஏ.ஜெகதீசன், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதியாக லதாப்ளாரன்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
6 உறுப்பினர்கள் நியமனம்: தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தெருவோர வியாபாரிகள் பிரதிநிதிகளுக்கான வாக்கெடுப்பின் மூலம் தேர்வான கே.மோனிஷா, எஸ்.கண்ணன், ஏ.ஜெனிபர், எம்.பாலமுருகன், எஸ்.சித்ரா, கே.பலராமன் ஆகிய 6 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.