சென்னை: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத் தலைவர் சீதாராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அவர் 3,504 பேருக்கு இளநிலை பட்டம், 551 பேருக்கு முதுநிலைப் பட்டம், 104 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 47 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இதில் டிப்ளமோ மருந்தகத் துறையில் பயின்ற 9 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத் தலைவர் சீதாராம் பேசும்போது, “மாணவர்கள் தங்களுக்கான பாதையை தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து தங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் எதிர்காலத்துக்கும் கல்வி அவசியம்” என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை உயர்த்த பல்கலைக்கழகங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். மருத்துவம் படிப்பதற்கு நீட் நுழைவுத் தேர்வு போன்று பொறியியல் கல்வி பயில்வதற்கு தேசிய தொழில்நுட்ப கல்வி குழுமத்தின் சார்பாக எந்தவித பொது நுழைவுத் தேர்வையும் நடத்தும் திட்டம் தற்போது வரை இல்லை” என்று கூறினார்.