சென்னை: தமிழகம் முழுவதும் சமீபத்தில் அடுத்தடுத்து 2 நாட்களில் 60 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மாற்றப்பட்ட இடத்துக்கு உடனடியாக புது அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். அதன்படி, சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இருந்த கபில் குமார்சி.சரத்கர், சென்னை காவல் தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டார். மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சுதாகர், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
மேலும், காலியாக இருந்த சென்னை வடக்கு மண்டல காவல் கூடுதல் ஆணையர் பொறுப்பில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் பணியமர்த்தப்பட்டார். இதையடுத்து, சென்னையில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.
போக்குவரத்து நெரிசல்... தென் மண்டல ஐ.ஜி.யாகஇருந்த அஸ்ரா கார்க், சென்னையில் பணியாற்றுவது இதுவே முதல்முறை. இதனால், சென்னை நிலவரம் குறித்து முழுமையாக அறிந்துவருகிறார். மேலும் சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைப்பதோடு, குற்ற செயல்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அதேபோல, சமீபகாலமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. அதை சரிசெய்யும் பணியில் அப்பிரிவு கூடுதல் ஆணையர் சுதாகர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார். புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் அதிகாரிகள் உற்சாகத்துடன் பணியாற்றி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, குற்றம் நடைபெறாத நகரமாக தலைநகரை மாற்ற வேண்டும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தி உள்ளார்.