சென்னை: சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக கடந்த 2021-ம் ஆண்டு முன்னாள் மாணவிகள் சிலர் புகார் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஒரு வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவசங்கர் பாபா தரப்பில், தங்களது பள்ளியில் கடந்த 2007-ம் ஆண்டு படித்த மாணவி 2021-ம் ஆண்டு சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பாலியல் புகார் அளித்துள்ளதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது அந்த மாணவி ஆஸ்திரேலியாவில் உள்ளதாகவும், அந்த மாணவி மின்னஞ்சல் மூலமாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளதாகவும் போலீஸார் கூறுவதால் புகாரின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்துள்ளதாக வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, அந்த மாணவியை செப்.15-ம் தேதிகாணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதுவரை இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்து, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.