கோவில்பட்டி: கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில் கோயில் கட்டிடம் கட்டுவதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி ஸ்டாலின் காலனி ஸ்ரீகாளியம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள இடத்தில் கோயிலுக்கான கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை அப்பகுதி மக்கள் தொடங்கினர். இந்த இடம் பள்ளிக்கு சொந்தமானது எனக்கூறி கட்டிடப் பணிகளை வருவாய்த் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஊர்த் தலைவர் சுடலைமணி, செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையில் ஏராளமான மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட இடத்தில் கோயிலுக்கான கூடுதல் கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் வட்டாட்சியர் லெனின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், அவர்கள் கோயில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
அதன் பின்னர், அவர்களுக்கு வட்டாட்சியர் கே.லெனின் சார்பில்நேற்று மாலை கடிதம் வழங்கப்பட்டது. அதில், மனுதாரர்களின் முதல் கோரிக்கையான அரசு புறம்போக்கு நகராட்சி பள்ளிக்கூடம் என்ற இடத்தில் காளியம்மன் கோயிலை இடம் மாற்ற செய்ய வேண்டும் என்ற கோரும் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
ஏற்கெனவே கோயில் இருக்கும் இடம் நகர நலவரித்திட்டத்தில் தெரு என நகர கணக்கில் தாக்கல் செய்ப்பட்டுள்ளதால், கோயில் அமைந்துள்ள 20 ச.மீ. இடம் நகர கணக்கில் கோயில் பெயரை பதிவு செய்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பள்ளிக்கூடத்துக்கு சொந்தமான இடத்தில் பள்ளிக்கான விரிவாக்கப் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை தடுத்து இடையூறு செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப் படுகிறது.
மீறி நடந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவை மீறி நடந்தால் நகராட்சி, காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு கூட்டு நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது, என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை கலைந்து சென்றனர்.