திருவள்ளூர்: அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த சிறுமி டானியாவுக்கு, திருநின்றவூர் அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் பணியை நேற்று அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இத்தம்பதியின் மகள் டானியா(9)-க்கு அரிய வகை முகச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு சிகிச்சையளிக்க உத்தரவிட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் 2 கட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குணமடைந்தார். அவரை முதல்வர் சந்தித்து நலம் விசாரித்தார்,
அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 30-ம் தேதி சிறுமி டானியாவுக்கு திருநின்றவூர் அருகே பாக்கம் கிராமத்தில் ரூ1.48 லட்சம் மதிப்புள்ள நிலத்துக்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் ரூ. 2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டிக் கொள்வதற்கான அனுமதி ஆணையை முதல்வர் வழங்கினார்.
இந்நிலையில், சிறுமி டானியாவுக்கு அளிக்கப்பட்ட வீட்டுமனையில், சுமார் 600 சதுர அடியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மானியத் தொகை ரூ. 2.10 லட்சம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் உள்ளிட்டவையின் பங்களிப்புத் தொகை ரூ.7.90 லட்சம் என, ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடு கட்டும் பணியை நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏக்களான சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் பாலமுரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின்போது சிறுமி டானியாவின் தாய் சவுபாக்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் குழந்தை நலமுடன் வாழ முக்கிய காரணம் முதல்வர் மு.க. ஸ்டாலின். வீட்டு மனை ஒதுக்கியதோடு, வீடு கட்டவும் அரசு மானியம் வழங்கியிருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றி” என்றார்.