சென்னை: காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்கள் மற்றும் போலீஸாரிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சென்னையில் திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை தினங்கள் தவிர தினமும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. காவல் ஆணையர் சார்பில் உயர் போலீஸ் அதிகாரிகள் மனுக்களை பெற்றுக்கொள்கின்றனர். புதன்கிழமைதோறும் காவல் ஆணையரே நேரில் மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்கிறார்.
அதன்படி, வேப்பேரியில் உள்ளதனது அலுவலகத்தில் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்கள் குறைதீர் முகாமில் நேற்று புகார்மனுக்களை பெற்றுக் கொண்டார். பொதுமக்களிடம் இருந்து 15 புகார்மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். மேலும், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் 23 போலீஸாரிடமிருந்தும் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் (தலைமையிடம்), துணை ஆணையர்கள் ராதாகிருஷ்ணன், வி.ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.