ஒட்டன்சத்திரம்: சிப்காட் அமைக்கும் திட்டம் ரத்தானதால், ஒட்டன்சத்திரம் கப்பல்பட்டி காளியம்மன் கோயிலில் கிடாக்களை வெட்டி கிராமத்தினர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் விவசாயிகள், பொது மக்கள் சிப்காட் அமைக்க வேண்டாம் என்று தெரிவித்த கோரிக்கையை கருத்தில் கொண்டு கள்ளிமந்தயம் பகுதியில் சிப்காட் அமைக்கப்படாது.
இது தொடர்பாக, எவ்வித ஆதாரமின்றி தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிப்காட் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டால், கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதாக ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கப்பல்பட்டி கிராம மக்கள் முடிவு செய்தனர்.
தற்போது சிப்காட் அமைக்கப்படாது என உறுதியானதால், கப்பல்பட்டி காளியம்மன் கோயிலில் கிராமத்தினர் 9 கிடாக்களை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் கொத்தையம், ஈசக்காம்பட்டி, சிக்கம நாயக்கன்பட்டி கிராமத்தினர் கலந்து கொண்டனர்.