யுபிஎஸ்சி தேர்வுகளில் 8-வது அட்டவணை மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam) எழுதும் நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்று அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதல் நிலைத் தேர்வில் நடத்தப்படும் சி-சாட்(C-Sat - Civil Services Aptitute Test) எனப்படும் திறனாய்வுத் தேர்வு ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகிறது. சி-சாட்1, சி-சாட் 2 ஆகிய தலா 200 மதிப்பெண்களைக் கொண்ட இரண்டு வினாத்தாள்களில் சி-சாட் 2, ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களால் மட்டுமே எழுதக் கூடிய வகையில் மிகவும் கடினமாக இருக்கிறது.
முதல்நிலைத் தேர்வில் நடத்தப்பெறும் திறனறித் தேர்வில், ஆங்கில மொழிப் பயிற்சி உள்ளவர்களால் எளிதில் எழுதி வெற்றி பெற்று அடுத்த கட்டத் தேர்வுகளுக்குச் செல்ல முடியும். ஆனால், ஆங்கிலம் கற்கமுடியாத ஏனைய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு, முதல்நிலைத் தேர்விலேயே தோல்வி அடைந்து வருகின்றனர்.
தாய்மொழியில் திறனறித் தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்கள், குடிமைப் பணி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும்.
கடந்த 2010-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திறனாய்வுத் தேர்வை ஆங்கிலத்தில் நடத்தும் முறையைக் கொண்டு வந்தபோதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. 2012-இல் நீதிமன்றம் தலையிட்ட பின்னர், இது குறித்து ஆய்வு செய்திட மார்ச் 2014-இல் மூன்று உறுப்பினர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை இன்னும் தயாராகவில்லை. இதற்குள் ஆகஸ்டு 24-ஆம் தேதி குடிமைப்பணிக்கான முதல் கட்டத் தேர்வுகளை நடத்த தேர்வாணையம் நுழைவுச் சீட்டுகளை ஜூலை 24 ஆம் தேதி முதல் வழங்கத் தொடங்கி இருக்கின்றது.
அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் யு.பி.எஸ்.சி. முதல்கட்ட திறனாய்வுத் தேர்வை மாணவர்கள் எழுதும் வகையில் மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அதுவரையில் ஆகஸ்டு 24 ஆம் தேதி நடத்த இருக்கும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதல் கட்டத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.